ஜெயஸ்ரீ ஷங்கர்

Wednesday, June 1, 2016

இதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப்பு எள் ..!





"புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகைஞ்
சத்துவங் கந்தித் தனியிளமை - மெத்தஉண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய் போமெண்ணெய்யாற் போற்று’

- இது நல்லெண்ணெய் பற்றிய அகத்தியர் பாடல்.

நல்லெண்ணெயால் புத்திக்கூர்மை பெறும், கண்கள் குளிர்ச்சி பெறும், உடல் பூரிப்பும் வளமையும் பெறும். இளமையும் அழகும் உண்டாகும். கண் நோய்கள், காது தொடர்பான நோய்கள், மண்டைக் கொதிப்பு, காசநோய், படை, சொறி, சிரங்கு ஆகியனவும் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.


"கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது நம் முன்னோர்கள் கூறிய பழமொழி.

காலையில் எழுந்ததும், ஆயில் புல்லிங் முறையாக, நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து சிறிது நேரம் கழித்து துப்பி விடுவது சிறந்த முறையாக தற்போது அனேகமாக நிறைய ஆரோக்கிய விரும்பிகள் பின்பற்றி வருவதும் நாம் அறிந்ததே. இந்த செய்முறையால் முகமும் பொலிவு பெறுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உயர் ரத்த அழுத்தமுடைய சர்க்கரை நோயாளிகளின் பிளாஸ்மா குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதானல் ஆயில் புல்லிங் அவசியம். இதே முறையில், ஆலிவ் எண்ணெய்யையும் உபயோகப் படுத்தலாம். இதே முறையை ஆலிவ் ஆயில் விட்டு கொப்பளிப்பதை இரவில் செய்தால் குறட்டை விடுதல் நாளடைவில் நின்று விடுமாம்.

உடலுக்கு பலம் தருவதாக, நோய்களை நீக்குகின்ற சக்தியைப் கருப்பு எள்ளுக்கு உண்டு என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும். கருப்பு எள் இருக்கிறதா என்று கடைகளில் கேட்டால் இங்கெல்லாம் (ஹைதராபாத்) நம்மை ஒரு மாதிரி பார்பார்கள். அதென்னவோ கடையில் வைத்திருப்பதே ஒரு பயம் என்பது போல. குறிப்பாக நீத்தார் கடன்களுக்கு மட்டுமே உபயோகப்படும் அல்லது சனி பகவானுக்கு எள்ளு விளக்குப் போட மட்டுமே உபயோகப் படும் ஒரு வித்தாக மனத்துள் போட்டு வைத்திருப்பார்கள்.

கருப்பு எள்ளும் , அதிலிருந்து செக்கில் ஆட்டிப் பெறப்படும் எண்ணெயும் பல நன்மைகளைதருவதால்தான் ‘நல்ல எண்ணெய்’ என்ற பொருளில் நல்லெண்ணெய் என அழைக்கப்பட்டு வருகிறது. கருப்பு எள்ளைத் தான் நாம் உணவவாகவும், மருந்ததாகவும் பயன்படுத்தல் வேண்டும்.

எள் செடியின் இலைகளை அரைத்து நீரிலிட்டுத் தீநீராக்கி தலைமுடிக்குத் தேய்த்துக் குளிக்க தலைமுடி ஆரோக்கியம் பெறும். மேலும் எள் செடியின் இலைகளை அரைத்து வெண்ணெயில் சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க ரத்த மூலம் தணியும். எள்ளின் இலைகளுக்கு கொழகொழப்புத் தன்மை உடையதால் சதையின் அழற்சியைப் போக்கி மிருதுவாக்கும். எள்ளின் இலை மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. எள்ளோடு வெல்லம் சேர்த்து செய்யும் பலகாரம் சுவையான உணவாகவும் சுகமான மருந்தாகவும் விளங்கும்.

எள்ளின் இலைகளை இரைப்பை கோளாறுகளுக்கும் சீதபேதிக்கும் அரைத்துக் கொடுத்தால் குணமாகிவிடும். எள்ளை பெண்கள் அதிகமாக உட்கொள்வதால் கரு கலையும் அபாயம் உள்ளது என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெயை தினமும் 10 மி.லி. வீதம் காலையில் உள்ளுக்கு சாப்பிட்டு வர இளைத்த தேகம் பூரிப்பு அடையும். நல்லெண்ணெயை தலைக்கும் உடல் முழுமைக்கும் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருப்பதோடு கண்களிலும் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு மென்மையாக மசாஜ் செய்து விடுவதாலும் கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மண்டைக் குத்தல் ஆகியன மறைந்து போகும். நல்லெண்ணெய் தேய்த்து இம்முறையில் அடுத்தடுத்து 3 நாட்கள் தலை முழுகி வர மேற்கண்ட பலன்கள் உண்டாகும்.

எள்ளுப் புண்ணாக்கை மோர் சேர்த்துக் கறி சமைத்து சாப்பிட உடலிலுள்ள சீதளத்தைக் கண்டிக்கும். அன்றாடம் கருப்பு எள்ளை 20 கிராம் அளவு எடுத்து நன்றாக மென்று தின்றுவிட்டு, குளிர்ந்த நீரைப் பருகிவர உடல் வலிமை பெறுவதோடு பற்களும் பலம் பெறும். எள் செடியை எரித்து வந்த சாம்பலைத் தயிரின் மேல் தேங்கிய தெளிவோடு சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்த் தடை விலகும், சிறுநீர் தாரை, எரிச்சல், புண்கள் ஆகியன குணமாகும். சிறுநீரகக் கற்களும் நீங்கும்.

நெருஞ்சில் முள், எள் மலர், தேன், நெய் இவற்றை சம அளவு சேர்த்து மைய அரைத்துத் தலைக்குத் தேய்ப்பதால் வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.‘உணவே மருந்து… மருந்தே உணவு’ என ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத வகையில், நம் முன்னோர்கள் நம் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் வகுத்துச் சென்றுள்ளனர். அவ்வகையில் உணவும் மருந்துமாக நாம் எள்ளைக் கிடைக்கப் பெற்றிருக்கிறோம்!

எண்ணெய்களின் மகிமை

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், புண்களை ஆற்றுவதிலும் உடலுக்கு உரம் தருவதிலும் சிறப்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நல்லெண்ணெய் அத்தனை சீக்கிரத்தில் கெடாது.கபாலச் சூடு, காதுவலி, சொறி சிரங்கு, ஆறாத புண்கள் இவற்றை ஆற்றும் தன்மையுடையது நல்லெண்ணெய்.

இன்றைக்கு அவசர உலகில், அந்நிய மோகத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் அறவே போய்விட்டது. இதனால் பலவித சரும நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும், மூட்டுவலித் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கெல்லாம் ஒரு சிறப்பான தடுப்பு முறை மருத்துவமாக எண்ணெய் குளியல் இருக்கிறது. அதனால்தான் ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் (எண்ணெய் வியாபாரி) கொடு’ என்று முன்னோர் சொல்லிச் சென்றனர்.

சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது வேறு ஏதேனும் மூலிகைக் கலவையைக் கொண்டு குளித்தால் சரும நோய்கள் அண்டாது.

சுத்தமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்யை நித்தம் ஒரு மூடி வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நல்ல நினைவாற்றலை கொண்டு வர இயலும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் மூளைக்கு வலு சேர்க்கும் என்றும் சொல்லப் படுகிறது.

அதே போல விளக்கெண்ணையை ஒரு துணியில் முக்கி வயிற்றில் பட்டி போட்டு வந்தால், மலச்சிக்கல் போயி போய்விடுமாம். அனுபவத்திலும் கண் கண்ட வைத்தியம் இது.

கடுகெண்ணையை முழங்கால் வலிக்கு தேய்த்து உப்பு ஒத்தடம் கொடுக்க வலி போயிந்தே.....ன்னு சந்தோஷப் படலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய் நெஞ்சு சளி, இருமல், ஜலதோஷம், தலைவலிக்கு அருமருந்து. மரத்தின் இலைகளை காய வைத்து தலைகாணி போல் உரையில் அடைத்து , அதில் படுக்க ஆரம்பித்தால் மைகிரேன் மற்றும் மண்டையிடி இவையெல்லாம் பறந்தே போகும்.

2 comments:

  1. பயனுள்ள தகவல்... நன்றி... சித்தமருத்துவ குறிப்புகள் தொடரட்டும்...by pvarun111@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete